மீண்டும் டெங்கு நோய் ஆதிக்கம் – குடாநாட்டில் இம்மாதம் 214 பேர் பாதிப்பு!

Saturday, June 23rd, 2018

யாழ் குடாநாட்டில் மீண்டும் டெங்கு நோய் தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினரால் டெங்கு நோய்த் தொற்று தொடர்பாக ஜீன் மாதத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் மிக மோசமாகக் காணப்பட்டு பல உயிர்களைக் காவு கொண்ட டெங்கு நோயின் தாக்கம் ஜனவரியில் அதிகரித்து அடுத்தடுத்த மாதங்களில் குறைவடைந்து கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் சடுதியாகக் குறைவடைந்தது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலும் அவ்வாறானதொரு நிலையே காணப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் 86 பேரும் கிளிநொச்சியில் 18 பேரும் மன்னாரில் 25 பேரும் வவுனியாவில் 24 பேரும் முல்லைத்தீவில் 4 பேருமென 137 பேரும் அடுத்த மே மாதத்தில் யாழ்ப்பாணத்தில் 100 பேரும் கிளிநொச்சியில் 20 பேரும் மன்னாரில் 2 பேரும் வவுனியாவில் 24 பேரும் முல்லைத்தீவில் 4 பேருமென 150 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை ஜனவரி பெப்ரவரி மாதங்களைக் காட்டிலும் குறைவானதாகவே இருந்தது. வடக்கு சுகாதாரப் பிரிவினரின் அளப்பெரிய செயற்பாடே நோயை விரட்டியதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைத்தும் பொய்த்து விட்டதைப்போன்று இந்த ஜீன் மாதத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரப் பிரிவினருடைய நடவடிக்கையையும் தாண்டி டெங்கு உருவெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் வரை 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்காகும். வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது பல மடங்கு டெங்கு நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் உருவாகியுள்ளது என்று விஞ்ஞானப் பகுதியினருடைய புள்ளி விவரம் கூறுகிறது.

Related posts: