உரிய பதில் கிடைக்கும் வரை கூட்டங்களை புறக்கணிப்போம் – மிகை ஊழியர்களாக நியமிக்கப்பட்ட அதிபர்கள் தீர்மானம்!

Wednesday, April 25th, 2018

மிகை ஊழியர்கள் என்ற அடிப்படையில் வடக்குப் பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட அதிபர்களாகிய நாம் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எமது கோரிக்கைகளுக்கு சரியான பதில் கிடைக்கும்வரையிலும் நாம் மாதாந்தக் கூட்டங்களுக்குச் சமூகம் கொடுக்க மாட்டோம் என்று பாதிக்கப்பட்ட அந்த அதிபர்கள் கவலை தெரிவித்தனர்.

வலய மாவட்டங்களில் இடம்பெறும் அதிபர்களுக்கான கூட்டங்களுக்குச் செல்லாமை தொடர்பாகவே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் –

வடக்கு மாகாணத்தில் போர் சூழலில் கடமை நிறைவேற்று அதிபர்களாக நாம் பாடசாலைகளில் கடமையாற்றுகின்றோம். அதி கஸ்டப் பிரதேசங்களில் சேவை மனப்பாங்குடன் நாம் கடமையாற்றினோம். இதனை அடிப்படையாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டு மிகை ஊழியர்கள் அடிப்படையில் 343 பேருக்கு அதிபர் நியமனங்கள் கிடைக்கப்பெற்றன. அதன்பின்னர் நாம் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அதிபர் தரம் 3, 2 களில் சேவையாற்றினோம். ஆனால் கடந்த வார இறுதி முதல் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம்.

அதிபர்களுக்கு வழங்கப்படும் மேலதிகபடி எமக்கு நிறுத்தப்பட்டுள்ளது புதிய சேவைப் பிரமாணக் குறிப்பின்படி தற்போது 2 ஆயிரத்து 50 முதல், 6 ஆயிரம் வரை பாடசாலைகளின் தரத்துக்கு ஏற்ப அதிபர்களுக்கு மேலதிகபடி வழங்கப்படுகின்றது.

ஆனால் எமக்கு அது வழங்கப்படுவதில்லை. 2017 ஆம் ஆண்டின் இறுதிவரை வழமையான மேலதிக படி எமக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு காரணங்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே எமக்குச் சரியான பதில் கிடைக்கும் வரையில் நாம் மாதாந்தக் கூட்டங்களுக்குச் சமூகம் கொடுக்க மாட்டோம் என்றுள்ளது.

Related posts: