ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளை தான் முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 05 உயர் நீதிமன்றங்களில் இதுவரை 09 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விசாரணைகளை நடத்துவதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் தொடர்பாக 23 ஆயிரத்து 700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2 1/2 வருடங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தான் திருப்தி அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: