அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் புகையிரதத்துறை தனியார் மயமாக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, June 13th, 2023

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புகையிரத திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் எனவே பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு என ஏற்படும் பாரிய செலவீனங்கள், திறமையின்மை மற்றும் சுயாதீனமாக தீர்மானம் எடுக்க இயலாமை என்பன திணைக்களத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று புகையிரத திணைக்களமும் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரசபையாக மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மாற்றம் செய்யபடாவிடின் ரயில்வேதுறை தனியார் மயமாக்குவதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதன் மூலம் அதிகாரிகள் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: