கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம் – இலங்கை – இந்தியாவில் இருந்து தலா 100 பக்தர்கள் பங்கேற்பு!

Friday, March 11th, 2022

இலங்கை – இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த திருவிழா இன்றும்(11) நாளையும் (12) நடைபெறவுள்ளது

1974 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் ஊடாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

இந்தியாவின் இராமநாதபுரத்தில் இருந்து 12.4 கடல் மைல் தொலைவிலும் நெடுந்தீவில் இருந்து 10.5 கடல் மைல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது.

கச்சத்தீவில் இருந்து மேற்கு திசையில் ஒரு கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பரப்பு அமைந்துள்ளதால், குறித்த பகுதியூடாக அவ்வப்போது இலங்கை கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமிக்கின்றனர்.

கச்சத்தீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டாலும் அதிலுள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் வருடாந்தம் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களுடன் சகோதரத்துவ உணர்வுடன் இணைந்தே பங்கேற்று வருகின்றனர்.

இரு தரப்பு மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையிலும், COVID தொற்று நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையிலும் இம்முறை திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவான பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கவுள்ள பக்தர்களை ஏற்றிச்செல்லும் படகுகளை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

பாரம்பரிய மீனவர்கள் சார்பில் திருவிழாவிற்கு செல்லும் விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு அரசு எரிபொருளை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா நடைபெறும் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக விசைப்படகு மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மீனவர்களின் பெயர் விபரங்கள் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்டன.

Related posts: