இ.போ.ச வின் போராட்டம்: போக்குவரத்தை  திறம்படக் கையாண்ட தனியார்!

Saturday, December 2nd, 2017

வடக்கில் 3 நாள்களாக ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியைத் தனியார் பேருந்துகள் திறம்படச் சீர் செய்திருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்து புறக்கணிப்பு என்றால் அரச பேருந்துகளில் பயணிப்பது சிரமமாக இருக்கும் ஆனால் இம்முறை அதை உணரமுடியவில்லை என்றனர் பயணிகள்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண பணியாளர்கள் கடந்த 3 நாள்களாகப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதனால் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் பருவகாலச் சீட்டில் பயணிப்பவர்களே அதிகம் நெருக்கடிகளை எதிர் கொண்டனர். ஏனையவர்களால் வழக்கம் போலவே பயணிக்கமுடிந்துள்ளது.

நெருக்கடியை இல்லாமல் செய்யவே அனைத்துப் பேருந்துகளும் களத்தில் இறங்கின என்று சாரதிகள் தெரிவித்தனர்.

அகில இலங்கை போக்குவரத்துக் கழக வடக்கு மாகாண சங்கத்தின் கீழ் பதிவில் உள்ள 531 பேருந்துகளும் மக்களின் சேவைக்காக களமிறக்கப்பட்டன என்று அதன் தலைவர் எஸ்.சிவபரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

தற்போது எமது சங்கத்தில் 531 பேருந்துகள் பதிவில் உள்ளன. நாளாந்தம் சராசரியாக 300 பேருந்துகளே சேவையில் ஈடுபடுவது வழமை. 3 நாள்களாக இலங்கை போக்குவரத்துச்சபையின் பேருந்துகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதனையடுத்து தனியார் பேருந்துகள் அனைத்தும் உடனடியாகவே களத்தில் இறக்கப்பட்டன.

அனைத்துப் பேருந்துகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது மட்டுமன்றி ஒரு சேவையில் ஈடுபட்ட பல பேருந்துகளுக்கு இரண்டு சேவைகளும் வழங்கப்பட்டு பணி இடம்பெற்றன. இதனால் பயணிகளின் நெருக்கடிகளை முடிந்தவரை தவிர்த்துள்ளோம்.

மாணவர்களின் பரீட்சைக் காலத்தைக் கருத்திற் கொண்டு மாணவர்களையும் உத்தியோகத்தர்களையும் ஏற்றியிறக்குவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் பணித்திருந்தோம் என்றார்.

இது மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்ளும் தற்போது 10 நிமிடங்களுக்கு ஒருதடவை பேருந்துகளை பணியில் ஈடுபடுத்தியிருந்தோம். நாளாந்தம் 350 க்கும் மேற்பட்ட பேருந்துகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன என்று யாழ்ப்பாண மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட தனியார் பேருந்துகளின் இணையத் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணக்குடாநாட்டில் மட்டும் தற்போது 590 சிற்றூர்திகள் பதிவில் உள்ளன. வழமையாக நாள் ஒன்றுக்கு 200 தொடக்கம் 250 சிற்றூர்திகளே பணியில் ஈடுபடும். 3 நாள்களாக 350 க்கும் மேற்பட்ட சிற்றூர்திகளைப் பணியில் ஈடுபடுத்தியிருந்தோம். சாதாரண நாள்களில் 15 நிமிடத்துக்கு ஒரு தடவை பேருந்து பணி இடம்பெறும். கடந்த சில நாள்களாக இலங்கைப் போக்குவரத்துச்சபையினரின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக 10 நிமிடத்துக்கு ஒரு தடவை பேருந்துகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன என்றார்.

Related posts: