ஏ9 வீதியில் வாகனங்களை நிறுத்துவதனை தடை – வடக்கு மாகாணசபை!

Thursday, August 9th, 2018

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான படிமுறையாக வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதனை தடை செய்ய வலியுறுத்திய பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

வடமாகாண சபையின் 129வது அமர்வு இன்று  (09) வடமாகாண சபை பேரவை மண்டபத்தில் அவைத்தலைவர் தலைமையில் ஆரம்பமாகியது.

அமர்வின் போது முன்வைக்கப்பட்ட பிரேரணையில் பின்வரும் விடயங்கள் முன்மொழியப்பட்டு விவாதங்களும் முன்வைக்கப்பட்டன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மிகப்; பெரும்பான்மையான விபத்துக்கள் ஏ9 வீதியோரங்களில்; இரவு நேரங்களில்; நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுடன் மோதியதனாலேயே இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2018.08.06ஆம் திகதி இயக்கச்சியில்; இடம்பெற்ற விபத்து இதற்கான அண்மைய உதாரணம் ஆகும். எனவே  வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியின் இருமருங்கிலும் வாகனங்கள் தரித்து நிற்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ்மா அதிபரையும், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபர்களையும்; வலியுறுத்தியுள்ளார்.

ஏ9 வீதியில்; பொருத்தமான இடங்களில் வீதிக்கு அப்பால் வாகனத் தரிப்பிடங்களை ஏற்பாடு செய்வதற்கு வட மாகாண வீதி அதிகாரசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரைகளை வழங்க வேண்டும்.

தற்செயலாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு 30 மீற்றருக்கு அப்பால் பின்புறமாக சிவப்பு ஒளி வீசும் முக்கோண ஒளிர்திகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் சகல வாகனங்களிலும் இருப்பதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்கான விதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை வட மாகாண போக்குவரத்து அதிகாரசபை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதை உறுப்பினர்களின் ஏகமனதான ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து பிரேரணை சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: