இவ்வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் – பிரதமர் மஹிந்த உறுதி!

Saturday, March 6th, 2021

நாட்டில் மின்சார வசதிகளை பெறமுடியாதுள்ள அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் 100 சதவீதம் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை பூர்த்திசெய்யப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைத்தபின் கருத்து தெரிவிக்கையிலேயே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்று குறுகிய காலப்பகுதியிலேயே கொரோனா தொற்றுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. ஆனாலும் பலம் பொருந்திய நாடுகளைவிட நாம் அந்நிலைமைய சிறப்பாக நிர்வகித்தோம். அதனுடன் நின்றுவிடாது நாம் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கும் மிகுந்த பொறுப்புடன் முகங்கொடுத்துவருகின்றோம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவில்லை. நாம் ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்களை நிறுத்தினர். அவர்களால் சுமார் 5 ஆண்டு காலமாக நாட்டின் அபிவிருத்தி பின்னோக்கி சென்றது.

நாட்டினதும், நாட்டு மக்களதும் நலனுக்காக நாம் மீண்டும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். எரிசக்திக்கு முக்கியத்துவமளித்தே இன்று உலகம் தீர்மானம் மேற்கொள்கிறது.

அந்தளவிற்கு எரிசக்தி எமது வாழ்விற்கு முக்கியமானதாகும். மின்சக்தி துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடியை முன்கூட்டியே அறிந்திருந்தமையாலேயே நீர் மின்சக்தி மீது மாத்திரம் தங்கியிராது நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை நிறுவினோம்.

அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட வரட்சி நிலைமையை சமாளிக்க அது பேருதவியாக அமைந்தது.நாம் அத்துடன் நின்றுவிடவில்லை.

காற்றாலை மின் உற்பத்தி, வெப்ப மின் உற்பத்தி நிலையம் மற்றும் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட திண்மக்கழிவு மின் உற்பத்தி நிலையம் மற்றும் சூரிய சக்தி மூலமும் மக்களுக்கு குறைந்த செலவில் மின்சாரம் வழங்க நாம் பணியாற்றி வருகின்றோம்

அத்துடன் தேசிய மின் கட்டமைப்பில் 350 மெகாவொட் மின்சாரத்தை இணைக்கும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டம் 21 மாதங்களுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது உற்பத்தி செய்யப்படும் 220 மெகாவொட் மின்சாரம் மற்றும் 12 மாதங்களில் நிறைவுசெய்யப்படவுள்ள இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் 130 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: