இளைஞர்களை வீதிக்கு அழைக்கும் சூழ்ச்சி இடம்பெறுகின்றது – குற்றம்சாட்டுகின்றார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Wednesday, April 19th, 2023

உயர்தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை தாமதப்படுத்தி இளைஞர்களை வீதிகளுக்கு அழைத்து செல்லும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உடனடியாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைவதால், 18, 19 மற்றும் 20 வயது இளைஞர்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகும் போது, சில அடிப்படைவாத அரசியல்வாதிகள், அவர்களை தங்களின் அரசியல் சித்தாந்தங்களுக்கு ஈர்க்கும் வேலைத்திட்டம் உள்ளதாக, புலனாய்வுப் பிரிவினர் கடந்த வாரம் அறிக்கையிட்டனர்.

ஆசியர்களுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் விரிவுரையாளர்களுக்கும், முன்னர் கிடைத்ததை விடவும், 90 சதவீத கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உதராணமாக இந்த கொடுப்பனவு அதிகரிப்புக்கு அமைய, 55 ஆயிரம் ரூபா கிடைத்த ஒருவருக்கு, ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபா கிடைக்கும்.

எவ்வளவு பொருளாதார பிரச்சினை இருந்தாலும், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக, 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை ஒதுக்க திறைசேரி இணங்கியுள்ளது.

எனவே, பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தப் பணிகளில் இணையுமாறு மீண்டும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: