இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவோர் ஆதாரத்தை கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால் 10,000 ரூபா முதல்கட்ட கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க முடியும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Wednesday, October 26th, 2022

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அனர்த்தங்களுக்கு உட்படுவோர் தாம் முதலில் அதற்கான புகைப்படமொன்றை எடுத்து அதனை அப்பிரதேசத்திலுள்ள கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால் முதல்கட்ட கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அதுதொடர்பில் தெரிவிக்கையில் –

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு உட்படுவோர் முதலில் அந்த சந்தர்ப்பத்தை படம்பிடித்து பிரதேச கிராமசேவை அதிகாரிக்கு கையளிக்க வேண்டும்.

அவ்வாறு கையளிப்பவர்களுக்கு முதற்கட்டமாக 10,000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அனர்த்தங்களுக்குட்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொருட்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

400 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு முதற்கட்டமாக 10,000 ரூபாவும் அதனையடுத்து பாதிப்புகளுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு நட்டஈடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமக்கோ அல்லது தமது வீடுகளுக்கோ இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்பு ஏற்படுமாயின் அதுதொடர்பிலான புகைப்படங்களை கிராமசேவை அதிகாரிகளுக்கு உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் தமது கொடுப்பனவுக்கான வேண்டுகோளையும் அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த வேண்டுகோள் பிரதேச செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன்பின்னர் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க நிவாரண சேவை மத்திய நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: