இலவசக் கல்வியைப் பெற்றபின்னர்புத்திஜீவிகளின் வெளியேற்றம் பெரும் பிரச்சினையாக உள்ளது – ஜனாதிபதி வருத்தம்!
Saturday, June 9th, 2018
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டுச் செல்வது தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த 500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றது. அதில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சட்டதிட்டங்களை விதித்து நாட்டிலிருந்து வெளியேறுவதற்குத் தடை ஏற்படுத்த அரசு தயாராக இல்லை எனினும் இலவசக் கல்வியைப் பெற்ற குடிமக்கள் என்ற வகையில் மனச்சாட்சியின்படி தாய்நாட்டுக்கான தமது கடமைகளை நிறைவேற்ற அவர்கள் அர்ப்பணிப்புடையவர்களாக இருக்க வேண்டும்.
கல்விமான்களும் புத்திஜீவிகளும் அதிகமாக வாழும் நாடுகளே துரிதமாக அபிவிருத்தி அடைகின்றன. நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார சுபீட்சம் ஆகிய இலக்குகளை அடைய அவர்களது பங்களிப்பு இன்றியமையாதது.
இலவசக் கல்வியை வழங்குவதற்காக பெரும் தொகை பணத்தை செலவிடுவதுடன் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அந்தத் துறையில் காணப்படும் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசு, மாகாண சபைகள் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்த வினைத்திறன்மிக்க விரிவான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|
|


