இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது – வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் கடாட் சேவோர்ஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, July 19th, 2023

இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளதுடன், சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் கடாட் சேவோர்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 12 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையின் வட்டி விகிதங்கள் மற்றும் எதிர்மறையான வளர்ச்சி வீதங்கள் குறைவடைந்துள்ள அதேவேளை, பல பொருளாதார அடிப்படைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலங்கையர் எதிர்கொண்ட பாரிய போராட்டங்களின் விளைவான பல சிரமங்களை தாம் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததாக உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில் இருந்து இலங்கை வேகமாக மீண்டுள்ளதுடன், நிலைமை மேலும் முன்னேற்றமடைவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கை முழுமையாக மீளவில்லை எனவும், இந்த வரலாறு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஏழை மற்றும் நலிந்த மக்களை உயர் நிலைக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: