இலங்கை நாணய மதிப்பிறக்கத்தை மூடிமறைக்கின்றது அரசு: முன்னாள் ஜாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு!

Thursday, September 27th, 2018

அமெரிக்க டொலருக்கு எதிராக இந்திய நாணயம் மதிப்பிறக்கமடைந்துள்ளதாக கூறி இலங்கை நாணய மதிப்பிறக்கத்தை மூடி மறைக்க அரசு முயற்சி செய்து வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடாவிடின் நாட்டுக்குப் பேராபத்துக் காத்திருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டரசு ஆட்சிக்கு வந்தநாள் தொடக்கம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்தே வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு இறுதியில் 131 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று 170 ரூபாவினைக் கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகின்றது.

நிதிநிறுவனங்களின் கையிருப்புக்குச் சமமாக அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து செல்கின்றமையே இதற்குக் காரணமென அரச தரப்புப் பிரதானிகள் கூறி வருகின்றனர்.

2007 – 2008 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் பெரியளவில் நெருக்கடியைச் சந்தித்திருந்தது. இந்தக் காலப்பகுதியில் வடகொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் சிதைந்து போனதுடன் அந்நாடுகளில் அமெரிக்க டொலருக்கான பெறுமதியும் பாரிய அளவு உயர்வடைந்திருந்தது.

ஆனால் அந்தப் பொருளாதார நெருக்கடிக்கு நாம் முகங்கொடுத்தது மாத்திரமன்றி இலங்கையின் பொருளாதாரத்தையும் பாதுகாத்திருந்தோம். 2007 ஆம் ஆண்டு உலகம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போது எமது நாட்டில் 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி 2008 ஆம் ஆண்டு நெருக்கடி முடிவடைந்த தருணத்தில் 114 ரூபாவாக இருந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதைய அரசு எவ்வித தூரநோக்குமின்றி எடுத்த சில நடவடிக்கைகளால் இன்று பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்துள்ளோம். எவ்வித அறிவிப்புமின்றி அரச சேவையாளர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. கனிய எண்ணெய்களின் விலைகள் குறைக்கப்பட்டன. ஏற்றுமதி தீர்வை நீக்கப்பட்டது. அபிவிருத்தியின்றி 697 பில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை நாணயத்தை விட இந்திய நாணயம் பெரிய வீழ்ச்சி கண்டுள்ளதாகக் கூறி பாரதூரமான இந்நிலையை மூடிமறைக்கப்பார்க்கிறது அரசு என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: