ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதியாக 2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு – யாழ்ப்பாணத்தில் 58 பேருந்துகள் இலவச சேவையில் என தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021

ஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் வியாழக்கிழமை மற்றும் நாளையும் ஆகிய இரு தினங்களும் திறந்திருக்கும் என பொருளாதார புத்துணர்ச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றும் நாளை மற்றும் நாளைமறுதினம் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு செல்வதற்கு இராணுவத்தினரால் இலவச பேருந்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளவரும் மக்கள் தங்கள் ஓய்வூதிய அடையாள அட்டைகளை அனுமதி அட்டைகளாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம்

யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு போக்குவரத்து வசதியாக இலங்கை போக்குவரத்துச் சபையின் 58 பேருந்துகள் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பிரதி பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் சூழ்நிலையால் பயணத் தடைகள் அமுலில் உள்ளது.

இந்நிலையில் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுபவர்களுக்கு வசதியாக பருத்திதுறை சாலையில் இருந்து 20 பேருந்துகளும், யாழ்.சாலையிலிருந்து 38 பேருந்துகளும் சேவையில் ஈடுபடவுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குறித்த போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தாதவர்கள் தமது தேசிய அடையாள அட்டை, ஓய்வூதிய கொடுப்பனவு அட்டை அல்லது திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் என்பவற்றைக் காண்பித்துப் பயணிக்க முடியும் எனப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: