யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலில் – சயைின் இன்றைய விஷேட அமர்வும் இரத்து!

Wednesday, March 24th, 2021

கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கடந்த 20 திகதி நெல்லியடியில் தான் கலந்து கொண்டமையால் தன்னை உடனடியாக சுய தனிமைப்படுத்திக் கொள்வதோடு பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்வதாக யாழ்.மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “தன்னுடன் இக்காலப் பகுதியில் தொடர்பு கொண்ட நபர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் இன்றையதினம் நடைபெறவிருந்த மாநகரசபையின் விசேட கூட்டம் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் பதிவாகின மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 248 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 907 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் கொரோனா தோற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே யாழ். நகரிலுள்ள மரக்கறிச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மரக்கறிகள், பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.நகரிலுள்ள மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 9 வியாபாரிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் 6 உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் பனம் பொருள்கள் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் மற்றும் மரக்கறி வியாபாரிகள் மூவரும் அடங்குகின்றனர்.

இதனால் சந்தைத் தொகுதியின் அனைத்து வியாபாரிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் கொரோனா நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 600 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே, 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: