இலங்கையை மீள வகைப்படுத்துங்கள் – ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள்!

Saturday, May 6th, 2023

நிதிசார் வசதிகளை இலகுவாக அணுகுவதற்கு ஏதுவான முறையில் இலங்கையை மீளவகைப்படுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித்தலைவர் ஷிக்ஸின் சென்னிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கைவிடுத்துள்ளார்.

தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் கடந்த 2 – 5 ஆம் திகதிவரை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கியஸ்த்தர்கள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தின்போது அவ்வங்கியின் பிரதித்தலைவர் ஷிக்ஸின் சென்னை சந்தித்துக் கலந்துரையாடுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி மேற்குறிப்பிட்டவாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் அலி சப்ரி, ‘நிதிசார் வசதிகளை மேலும் இலகுவாக அணுகுவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடியவாறு இலங்கையை மீள வகைப்படுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித்தலைவரிடம் கேட்டுக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு உதவும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு கொள்கைசார் கடனுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: