மயிலிட்டி க.கூ.சங்கத்திற்கு வழங்கப்பட்ட படகுகள் பாதிப்படையும் அபாயம்! – மக்கள் விசனம்!

Saturday, June 16th, 2018

கடந்த ஆண்டு மயிலிட்டி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட படகுகள் எவ்வித பயன்பாடுமற்று பழுதடையும் நிலையில் இருப்பதாக மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் இணைந்து 5 படகுகளை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கோடு மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க நிர்வாகத்திடம் வழங்கி வைத்தனர்.

இந்நிலையில் குறித்த பல இலட்சம் ரூபா பெறுமதியான 5 படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படாது மயிலிட்டி துறைமுகம் முன்பாக வெயிலில் எவ்வித பயன்பாடுமற்று காணப்படுகின்றது.

மேலும் மயிலிட்டி துறைமுகம் விடுக்கப்பட்ட நிலையில் அப் பகுதியில் மீள்குடியேறிய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எவ்வித உதவிகளும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட படகுகள் பயன்பாடற்று காணப்படுவது குறித்து வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எனவும் மயிலிட்டி பகுதி கடற்றொழிலாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

கடல்தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பில் செயற்பாடற்று காணப்படும் படகுகளை மீட்டு அப்பகுதியில் தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு வழங்க யாழ் மாவட்ட அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை இடப்பெயர்வின் பின்னர் தற்காலிகமாக பருத்தித்துறையில் இயங்கிவரும் மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினை தற்போது மயிலிட்டி பிரதேசம் விடுவிக்கப்பட்ட போதும் மாற்றாமல் இழுத்தடிப்பது ஏன்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

FB_IMG_1529048787138

Related posts: