இலங்கையின் கடலில் காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

Thursday, January 5th, 2017

கிழக்கு மாகாணத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போயுள்ள ஆறு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் தேடும் பணியில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர்களான இம்மீனவர்கள் காணாமல் போயுள்ள சம்பவம் அந்த பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மாதம் 24-ஆம் தேதியன்று, ஓலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகுகளில் புறப்பட்டு சென்ற இம் மீனவர்கள் காணாமல் போய் 13 நாட்கள்ஆகிவிட்டது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆழ் கடல் மீன் பிடித் தொழிலுக்கு செல்லும் இவர்கள் வழமையாக 4- 5 நாட்களில் திரும்பி விடுவார்கள் என்று உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். இம்மீனவர்கள் காணமல் போனது தொடர்பாக கல்முனை மற்றும் அக்கரைப்பற்று போலீசாரிடம் உறவினர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மீனவர்களை தேடும் பணிகளுக்காக மீன்பிடித்துறை அமைச்சு கடற்படையின் உதவியையும் பெற்றுள்ளது. 5-6 நாட்களாக கடற்படை உதவியுடன் தேடுதல் இடம் பெறுகின்ற போதிலும் இதுவரை இவர்கள் குறித்து தகவல்கள் இல்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள தினைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: