இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் என்ற யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்காது – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக் குழுவொன்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் பிஷப் ஹரோல்ட் அந்தோனியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 88 தொகுதிகளையும் 48,909 பக்கங்களையும் கொண்ட அறிக்கையை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்கினார்.

அமைச்சர் அலஸ் மற்றும் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, அந்த அறிக்கையை தாம் தனிப்பட்ட முறையில் மீளாய்வு செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் என்ற யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்க முடியாது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் தற்போதுள்ள அனைத்து சட்டங்களும் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு இடமளிக்கவில்லை. எனவே, இதுபோன்ற விசாரணைகளை மேற்கொள்வது சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆயர்கள் முழுமையாக மீளாய்வு செய்ததன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடலில் ஈடுபட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: