புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து , ரயில்கள் – 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!

Tuesday, April 12th, 2022

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் திகதி வரை விசேட பஸ் மற்றும் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன தெரிவித்துள்ளன. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டு நீண்ட தூர சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட பயணிகள் மற்றும் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 04 டிப்போக்களில் இருந்தும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக இ.போ.ச பிரதிப் பொது முகாமையாளர் துவான பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மகும்புரவிலிருந்து கிராமிய பகுதிகளுக்கு விசேட பயணங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தின் திட்ட முகாமையாளர் நாகல திஸாநாயக்க 24மணித்தியாலங்களும் இயங்கி வருவதாக தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து பயணிகளுக்காக பல மேலதிக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது சேவையில் ஈடுபடும் புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

புத்தாண்டு விடுமுறைக்காக வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: