இலங்கையின் உறுதியான நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் – நிதி அமைச்சர் பசிலுடனான காணொளி கலந்துரையாடலில் இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளிப்பு!

Saturday, January 15th, 2022

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் தொலை காணொளி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் என்பதை மீள உறுதிப்படுத்துவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் கடன் வசதிகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் ஊடக 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் கடன் மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிஉதவி குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்காக ஏனைய உலக நாடுகளின் முயற்சிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் மேலும் ஒருதொகுதி மீன் ...
இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு திருநாளாகும் - நத்தார் வாழ்த்தச் செய்தியில் பிரதமர...
3 இலட்சம் பீப்பாய் பெற்றோல் கொள்வனவுக்கான நாணயக் கடிதம் திறப்பு - நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீச...