இலங்கையின் அமைவிடம் கடற்படை செயற்பாடுகளுக்கு அவசியம் – ஜனாதிபதி!

Sunday, September 3rd, 2017

இந்து சமுத்திர வலயத்தை அமைதியான வலயமாக மாற்றி ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக செயற்படும் கேந்திர நிலையமாக மாற்றவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற 2017ஆம் ஆண்டின் இந்து சமுத்திர வலய மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பூகோள ரீதியில் இந்து சமுத்திரத்தின் மிக முக்கியமான கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்காவின் அமைவிடம், வலயத்தின் பொருளாதார, கடற்படை செயற்பாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது என வலியுறுத்தியுள்ளா்ர.

அது மாத்திரமன்றி ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் சௌபாக்கியத்திற்கும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மிக முக்கியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைந்த சிறந்த சமூகமாக நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து முன்னோக்கி செல்வதற்கு ஸ்ரீலங்கா அனைத்து சகோதர நாடுகளுடனும் அமைதியுடனும், நட்புடனும் கைகோர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த மானிட சமுதாயத்தின் நன்மைக்கும் சமுத்திரம் ஏதுவாக அமைவதுடன், மனிதர்களின் தவறான நடத்தைக்கும் இன்று சமுத்திரப் பரப்புக்கள் உபயோகிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியை சீர்குழைக்கும் யுத்த நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு சமுத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பாக இந்த மாநாட்டில் செலுத்தப்பட்டிருக்கும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இந்து சமுத்திர வலயத்தில் அமைந்துள்ள அனைத்து நாடுகளும் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதியை மதித்து செயற்படுகின்ற அதேவேளை சர்வதேச ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் 1960ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இந்து சமுத்திர வலயத்தை அமைதியான வலயமாக மாற்றுவதற்காக தெரிவித்த முன்மொழிவையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

இந்து சமுத்திர வலயத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்படும் இந்து சமுத்திர வலய மாநாடு “அமைதி, அபிவிருத்தி மற்றும் செளபாக்கியம்” எனும் தொனிப்பொருளின் கீழ் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.

சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 30 நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 300 பேர் வரையில் பங்குபற்றினர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சாகல ரத்நாயக்க, திலக் மாரப்பன, ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Related posts: