இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி மூலம் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்க கூட்டத்தின் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூட்டத்தில் உரையாற்றுகையில், உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, நாணய ஆதரவு மற்றும் நீண்ட கால முதலீடு ஆகிய நான்கு முக்கிய துறைகளில் இந்தியா-இலங்கை உறவுகள் மேலும் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் இலங்கை இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கை இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உட்பட அங்கத்தவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: