இலங்கைக்கு 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் நன்கொடையாக வழங்கிவைப்பு!

Thursday, July 7th, 2022

இலங்கைக்கு 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை அரசாங்கம் பேணுவதற்கு உதவுவதற்காக, குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், இந்த குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் இந்த அவசர மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. 

குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் அஹமட் அப்துல்லா அல்சரஃப் உடனான சந்திப்பின் போது, குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் யூ.எல். மொஹமட் ஜௌஹரின் பங்களிப்புக்கு இலங்கை மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்தார்.

மருத்துவப் பொருட்களில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் உள்ளடங்கியிருந்ததுடன், அவை ஸ்ரீலங்கன் எயார்லைன் மூலம் இலவசமாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டன. தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கத்தினால் குவைத் எல்லைக்கு வெளியே இத்தகைய பங்களிப்பைச் செய்ய தீர்மானித்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

இச்சங்கம் குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு 81,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் விமானக் கட்டணம், உலர் உணவுகள் வழங்குதல் மற்றும் பாடசாலைக் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றின் மூலம் உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.. 

Related posts: