ஜீலை மாத இறுதியில் கொடிகாமம் – பருத்தித்துறை வீதி புனரமைப்பு!

Friday, June 22nd, 2018

எதிர்வரும் ஜீலை மாத இறுதிப் பகுதியில் கொடிகாமம் – பருத்தித்துறை வீதி புனரமைப்புச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என யாழ் மாவட்ட மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதி புனரமைக்கப்பட்ட வேண்டியதன் முக்கியத்துவம் அரசினால் கவனத்தில் எடுக்கப்பட்டு வீதியின் புனரமைப்பிற்கான நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு முதல் உலக வங்கியின் நிதி உதவியுடன் பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழான முலோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொடிகாமம் முதல் புலோலி சந்தி வரையான 14.6 கி.மீ. பகுதியின் புனரமைப்புப் பற்றிய பல கலந்துரையாடல்கள் 2016 முதல் குறித்த வீதியின் இரு மருங்கிலும் உள்ள மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் மேற்கொள்ளப்பட்டு திட்ட வடிவமைப்புக்கள் தயாரிக்கப்பட்டு இலங்கை அரசாங்கம் மற்றும் உலக வங்கியின் கொள்கைகளுக்கு அமைவாக அகலிப்புக்குத் தேவையான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

பருத்தித்துறை மற்றும் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவினுள் சுவீகரிக்கப்படும் காணிகளுக்கான நட்டஈடுகள் கடந்த மாதங்களில் பல காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. மிகுதிக் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் ஜீலை மாத நடுப்பகுதியில் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இவ் வேலைக்கான கேள்வி கோரப்பட்டு ஒப்பந்தக்காரரும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின் எதிர்வரும் ஜீலை மாத இறுதியில் வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று மூலோபாய நகர அபிவிருத்தித் திட்ட மேலதிக திட்டப் பணிப்பாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: