இலங்கைக்கு வழங்கும் எந்தவித உதவிகளையும் எந்த நாடும் நிறுத்தவில்லை – சர்வதேச ரீதியில் சிறப்பான நட்புறவுகளுடன் உதவிகளும் கிடைக்கின்றன – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, October 8th, 2022

சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் நாடுகளுக்கு இடையில் நட்புறவுகள் சிறப்பாக பேணப்படும் நிலையில் சர்வதேச உதவிகள் தொடர்ந்து தடையின்றி கிடைத்து வருவதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அது விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனிவாவில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பிரதமர் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர் –

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸும் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக பணிபுரிந்துள்ள அதேவேளை நானும் அப்ப பதவியை வகித்துள்ளேன். அந்த வகையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் இருவருமே நன்கறிவோம்.

மனித உரிமைகள் விடயத்தில் நாம் பின்பற்றியுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் பேராசிரியர் ஜீ .எல் . பீரிஸ் நன்கறிவார்.

இந்நிலையில் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தீர்மானத்திற்கு எதிராக 07 நாடுகளே வாக்களித்துள்ள நிலையில் இலங்கை தனிமைப்பட்டுள்ளதாக சிந்திப்பது தவறானது.

அனைத்து நாடுகளுடனும் சிறந்த நட்புறவை நாம் தொடர்ந்து பேணிப் பாதுகாப்போம். அந்த நட்புறவின் பிரதிபலன்களை நாட்டிற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நாடும் இலங்கைக்கு வழங்கும் எந்தவித உதவிகளையும் நிறுத்தவில்லை என்றும் பிரதமர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: