இலங்கைக்கான கடன் எல்லை வசதியை மேலும் ஓராண்டுக்கு நீடித்தது இந்தியா!

Wednesday, May 10th, 2023

இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது என்று திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்னாயக்கவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையின் நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின்போது, இந்தியாவால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர உதவியின் ஒரு பகுதியான, கடன் எல்லை வசதி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கடன் எல்லை வசதியில் சுமார் 350 மில்லியன் மீதமுள்ளன என்றும் அவை தேவைக்கேற்ப பயன்படுத்தப்படலாம்” என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தையில் அன்னியச் செலாவணியின் கிடைப்பனவு அதிகரித்துள்ள நிலையில்,  கடந்த ஆண்டை விட தேவை அதிகமாக இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட வசதியை நீடிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கடந்த மார்ச்சில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், தற்போது இந்தியா குறித்த கடன் வசதியை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் வரை, ஒரு வருடத்தினால்  நீடித்துள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: