இறக்குமதி அரிசிக்கு தனித்தனி கட்டுப்பாட்டு விலைகள் – ஜனாதிபதி!

Wednesday, February 15th, 2017

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கு தனித்தனியாகக் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரிசி தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்களுக்கு சலுகை விலையில் அரிசியைப் பெற்றுக்கொடுக்க சிறந்த முறையொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நெல் உற்பத்தியாளர்களுக்கிடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லுற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறை காரணமாக நெல்லுற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி வகைகளுக்கு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அதேபோன்று வர்த்தக நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிற வகையான அரிசி வகைகள் மீது தனியான வரிவிதிப்பை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார். அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, ரிசாட் பதியுதீன் பி. ஹரிசன், ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. அபேகோன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் காரணமாக, சந்தையில் அரிசியின் விலையில் தளம்பல் நிலை ஏற்படாது என கருதப்படுகிறது.

Maithripala-Sirisena

Related posts: