X-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட இலங்கை வருகின்றது ஐ.நா குழு!

Wednesday, June 16th, 2021

கடல் சூழலியல் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதும் அதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த குழுவின் நோக்கம் என அதன் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், நச்சுப் பொருட்கள் தொடர்பான நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் பகுப்பாய்வு செய்யும் நிபுணர் உள்ளிட்ட குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

கடல் சூழலியல் ஆராய்ச்சி தொடர்பாக ஐ.நா விசேட நிபுணர் குழுவானது, X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏந்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினை மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளது.

நாட்டின் வட மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 200 கிலோமீற்றர் தூரம் வரையுள்ள கடற்பிராந்தியம் துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி கடலோர பாதுகாப்பு கழிவுப்பொருள் வெளியேற்றம் மற்றும் துப்பரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடற்பிராந்தியங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட ஆயிரம் மெட்ரிக் தொன் கழிவுகளை சேகரித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அபாயகரமான கழிவுகளை களஞ்சியப்படுத்தும் 44 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: