தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கைமுதலிடத்தில் – யுனிசெப் !

Wednesday, August 1st, 2018

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கைத் தாய்மார்களே முன்னணியில் நிற்கிறார்கள் என்று யுனிசெப் அமைப்புத் தெரிவித்தது.

தாய்ப்பால் குடித்து வளரும் பிள்ளைகள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் புத்திசாலிகளாகவும் உள்ளனர். ஒரு குழந்தையின் முக்கிய வளர்ச்சி அதன் மூன்று வருடங்களிலேயே முழுமையடைந்து விடுகிறது. இந்தப் பருவத்தில் அந்தக் குழந்தை தாய்ப்பாலை குடிப்பதனூடாகத் தனக்குத் தேவையான சகல சத்துணவுகளையும் பெற்றுக்கொள்கிறது. அதனால் அத்தகைய குழந்தைகள் வளர்ச்சியடைந்த பின்னர் ஆரோக்கியமான திடகாத்திரமான புத்திசாலியாக விளங்குகிறார்கள் என்று அமைப்புத் தெரிவித்துள்ளது.

யுனிசெப் அமைப்பின் அதிகாரியாக கலாநிதி தம்மிக்க ரோவல் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் ஆய்வுகள் நடத்திய பின் இந்தத் தகவலை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார்.

தொழில்புரியும் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ள தாய்மார்களுக்கு அவர்கள் தொழில்புரியும் நிலையங்களில் அவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தாய்ப்பால் பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்புப் புற்றுநோய் வரும் சந்தரப்பங்களும் வெகு குறைவு என்று சுகாதார ஊக்குவிப்பு நிறுவன இயக்குநர் கலாநிதி பல்லியவர்தன கூறியுள்ளார்.

எல்லாக் குழந்தைகளும் பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவுமே உணவோ, குடிப்பதற்குப் பானங்களோ கொடுக்கப்படக்கூடாது என்றார்.ஒரு குழந்தை பயணம் செய்யும்போது அல்லது தாயோ பிள்ளையோ சுகவீனம் அடையும் போது பருகப்படவேண்டியது தாய்ப்பால் மட்டுமே தவிர வேறு எதுவும் இல்லை. தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் வேறு பல விதமான நோய்களுக்கும் ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகமாகவேயுள்ளன. தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய டைப் 2 என்று கூறப்படும் நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களையும் குறைப்பதாகக் கூறப்படுகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: