இரண்டாவது முறையாகவும் யாழ். போதனா வைத்தியசாலையில் கண்டற்கழலை நோய்க்கான நவீன சத்திரசிகிச்சை வெற்றி!

Monday, April 2nd, 2018

தொண்டையில் ஏற்படும் கண்டற்கழலை நோய்க்கான நவீன சத்திரசிகிச்சையானது இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சையை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை சத்திர சிகிச்சை மருத்துவ நிபுணரான பா.திருமாறனும் அவரது குழாமினருமே வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

இலங்கையிலேயே குறித்த நோய்க்காக முதன் முதலில் கடந்த மாதம் 15 ஆம் திகதியன்று 41 வயதுடைய நபருக்கு இந்தச் சத்திர சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது 2 ஆவது தடவையாக கடந்த வியாழக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் குறித்த சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வெற்றியளித்துள்ளது. 40 வயதான நபர் ஒருவருக்கு இந்தச் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சத்திரசிகிச்சை தொண்டைப் பகுதியில் எவ்வித காயங்களும் ஏற்படுத்தாது செய்யப்படுவதால் தொண்டைப் பகுதியில் எவ்வித தழும்புகளும் ஏற்படாது.

இதன்மூலம் இளம்பராயத்தினருக்கு ஏற்படும் உளப்பாதிப்பு அற்றுப்போகும். மேலும் நோயாளிகளுக்கும் இச்சத்திரசிகிச்சை மூலம் ஏற்படும் வலி மிகக் குறைவாக இருப்பதுடன் முழுமையாகச் சுகமடைதல் விரைவாகுமென சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சையால் தனக்கு எவ்வித வலிகளும் ஏற்படவில்லையெனவும் இதன்மூலம் தங்களுக்கு எவ்வித தழும்புகளும் தொண்டைப் பகுதியில் ஏற்படாதிருப்பது மிகுந்த சந்தோசத்தினை ஏற்படுத்தியுள்ளதெனவும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளி குறிப்பிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சத்திரசிகிச்சையானது உலகளாவிய ரீதியில் பிரபலமாகும். அதேவேளை இந்த வைத்தியசாலையிலும் கண்டற்கழலைக்காக தழும்பு ஏற்படாத வகையில் இந்த நவீன சத்திரசிகிச்சையானது செய்யப்பட்டுள்ளமை பாராட்டுதலுக்குரியதாகுமென வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts: