விவசாயத்துறையை கட்டியெழுப்ப புதிய தொழில் நுட்பரீதியிலான வேலைத்திட்டம் – அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, April 2nd, 2024

நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் புதிய தொழில் நுட்பரீதியிலான வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ். மாலதி பரசுராமன் தெரிவித்துள்ளார்.

பாலமுனை விவசாய பயிற்சி கல்லூரியில் 2020/2021 கல்வியாண்டுக்கான ஆங்கில மொழி மூல டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் விவசாயக் கல்லூரியில் அதிபர் ஏ.எஸ்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். பணிப்பாளர் நாயகம் எம்.எஸ். மாலதி பரசுராமன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இங்கு வழங்கப்படுகின்ற டிப்ளோமா சான்றிதழானது உங்களது வாழ்க்கையின் முதல் படியாகும். மேலும் உயர் தரமான கற்கை நெறிகளை மேற்கொண்டு முன்னேறி நாட்டின் விவசாயத்துறைக்கு பெரும் பங்காற்ற வேண்டும்.

இப் பாடசாலையானது இப்பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது நாட்டின் தேசிய உற்பத்திக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

குறைந்த வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பாடசாலை தற்போது இங்குள்ள அதிகாரிகளின் முயற்சியினால் பரிணாம வளர்ச்சியடைந்து சகல வசதிகளும் கொண்ட ஒரு பாடசாலையாக அமைந்துள்ளது. இலங்கையில் காணப்படும் விவசாயப் பாடசாலைகளில் இப்பாடசாலை ஒரு முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றமையை பாராட்டுகின்றேன்.

இப் பாடசாலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது தான் இதனை அபிவிருத்தியடைந்த பாடசாலையாக கொண்டு செல்ல முடியும்.

கிழக்கு மாகாணம் விவசாயத் துறைக்கு பெரும் பங்காற்றி வருகின்றது. அந்தவகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவ, மாணவிகள் இப்பாடசாலையில் கல்வி கற்பதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: