எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – 6.4 பில்.டொலரை நட்ட ஈடாக பெற அரசாங்கம் நடவடிக்கை!

Thursday, May 11th, 2023

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை சார்பாக சட்ட மாஅதிபர் திணைக்களம் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் (15) இல், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதேபோன்று, கப்பலின் மாலுமி கப்பலை சட்டவிரோதமான முறையில் செலுத்தியுள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில், நாடாளுமன்றத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பொறுப்பற்ற முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இது, எமது நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட இடமுண்டு. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தை அரசாங்கம் மறைக்க முற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தவே, அரச தரப்பு இந்த விவாதத்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

எனினும், நிலையியற் கட்டளையின் கட்டளைக்கு இணங்க இந்த விவாதத்தை நடத்த முடியாது. அதனால் இந்த விவாதத்தை நடத்துவதா? இல்லையா? என சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விடயங்களை விவாதிப்பதால், அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இதனால் விவாதத்தை நடத்தாமல் இருப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச சபையில் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: