இரட்டை நிலைப்பாடு கொண்ட விக்னேஸ்வரன் போன்றவர்களால் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, October 13th, 2023

இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (13.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர்’ மேலும் கூறுகையில் –

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆங்கில புலமை போதாமையால் அவருக்கு சட்டமா அதிபர் அலுவலகத்தால் கூறப்பட்ட கூற்றை தவறாக விளங்கிக்கொண்டார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

பின்னர் முல்லைத்தீவு நீதிபதி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக கூறி நடத்தப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

வடக்கு மாகாண சபையின் அதிகாரம் கிடைத்திருந்தும் வினைத்திறனற்ற முதல்வராக பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரன் கடந்த காலங்களில் அரசுக்கு விசுவாசமாக செயற்பட்டதுடன் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி சிறையிலிட்டவருமாவார்.

அதேபோன்று இவர் எந்த சந்தர்ப்பத்திலும் மக்களின் உரிமைக்காக போராடியவர்களை விடுதலைப் போராளிகள் என கூறியதும் கிடையாது. அதுமட்டுமல்லாது இவரது தீர்ப்புகளால் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தவர்களும் பலர் உள்ளனர்.

இதனிடையே தற்போது ஹர்த்தல் அனுஸ்டிக்கப்போவதாக அவரும் அவரது கூட்டாளிக் கட்சிகளும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. உண்மையில் மனிதச் சங்கில், ஹர்த்தால் போராட்டங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்து அன்றாட ஜீவனோபாயத்திற்கு ஏங்கும் எமது மக்களின் வறுமையை மேலும் அதிகரிக்குமே தவிர இவர்களது போராட்டத்தை தென்னிலங்கை கண்டுகொள்ளப் போவதில்லை.

மாறாக வடக்கு கிழக்கில் அரசுக்கு எதிரான போராட்டகள் எனக்கூறி நடைபெறும் இவர்களது இவ்வாறான செயற்பாடுகள் தென்னிலங்கையின் சிங்கள தேசியத்தை வலும்படுத்துவதற்கும் அததற்கான முகவர்களாக இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதே பட்டவர்த்தமான உண்மையாகும்.

இதேவேளை இவர் தன்னைப்போலவே முல்லைத்தீவு நீதிபதியும் இருந்திருக்க வேண்டும் என விரும்புகின்றாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநரி...
வற் வரி அதிகரிப்பு - பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீ...
அமைச்சர் டக்ளஸ் வழிகாட்டல் - மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை - .இராஜ...