இரட்டைக் குடியுரிமையுடைய எம்.பி. நாடாளுமன்றத்தில் இருக்கின்றாரா? – நிச்சயம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022

இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.யொருவர் நாடாளுமன்றத்தில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி, குறிப்பிடுகையில், குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரால் வெளியிடப்பட்டுள்ள

அறிக்கையை பாராளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் (05) சமர்ப்பித்தேன். பாராளுமன்ற செயலாளரினால் பாராளுமள்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜதந்திர கடவுசீட்டு விநியோகிக்குமாறு தெரிவித்து அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்டன் பிரஜை என்பதால் அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டொன்று வழங்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சபாநாயகர் இந்த சம்பவம் தொடர்பில் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா? என கேட்கின்றேன் என்றார்.

இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி எம்.பி. குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இரட்டைக் குடியுரிமையை கொண்ட பெண் எம்.பியொருவர், சட்டத்துக்கு புறம்பான வகையில் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றார். இதன்படி இந்த விடயத்தில் சபாநாயகர் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்றார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிவுறுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: