இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு வழிவகுத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே – வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்!

Tuesday, August 7th, 2018

வடக்கில் பொறியியல் பீடம் அமைக்கப்பட்டு இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா அவர்களே காரணகர்த்தாவாக செயற்பட்டவர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

ahயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்தள்ள பொறியியல் பீடத்திற்கான விடுதிகள் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்  ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து போர் நிறைவடையும் வரை பொறியியல் பீடம் ஒன்றினை அமைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்தது.

ஆனால் போர் நிறைவுற்றதன் பின்னர் 2013ம் ஆண்டில் அதை சாத்தியப்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே. குறிப்பாக 1974 களில் அரைப் பல்கலைக்கழகம் எமக்கு வேண்டாம் என கறுப்புக் கொடியை ஏந்தியவாறு தமிழரசுக்கட்சியினர் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

ஆனால் இன்று யாழ் வளாகம் பல்கலைக்கழகமாக 10 பீடங்களை கொண்டு வெற்றிகரமாகவே செயற்படுகின்றது. ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கும் கூட இந்த யாழ் பல்கலைக்கழகம் காத்திரமான பங்களிப்பை கடந்தகாலங்களில் வழங்கியிருந்தமையை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் தான் போரின் பின்னர் இராணுவ வசமிருந்த சுமார் 800 ஏக்கர்  காணிகளை விடுவித்து தருமாறு செயலாளர் நாயகம் டக்ள்ஸ் தேவானந்தா அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாகவே இன்று இந்த காணிகள் விடுவிக்கப் பட்டது மட்டுமல்லாது விவசாய பீடமும் பொறியியல் பீடமும் வெற்றிகரமாக இயங்கி வருவதோடு பல மாணவர்கள் பட்டங்கள் பெற்று வெளியேறி இருப்பதையும் காணமுடிகின்றது.

டக்ளஸ் தேவானந்தா தனது தற்துணிவான அரசியல் நகர்வுகள் மூலம் இதை கையாண்டிராதுவிடின் இந்த காணிகள் வன இலாகாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டிருக்கும். இதற்கான முனைப்புகள் அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் தான் இந்த காணிகள் சாதுர்யமாக மீட்கப்பட்டு இன்று உயர்கல்வியில் மாணவர்கள் மிளிர்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதையாரும் மறுக்க முடியாது என்று தவநாதன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Related posts: