அரச தலைவர் கட்டளையிட்டும் கூட வடக்கு அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை: விவசாயிகள் கவலை!

Saturday, October 13th, 2018

இலங்கையில் உள்ள விவசாயிகள் நன்மையடையும் வகையில் மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்த திட்டம் வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகாரிகளால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் நன்மையடையும் வகையில் குறைந்த கட்டண அறவீட்டுக்கான பிறிதொரு மின்மாணி பொருத்தும் திட்டமே அது.

2016 ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் உடன் நடைமுறைக்கு வரும் என்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கட்டளையிட்டிருந்தார். அதற்கான ஆரம்ப நிகழ்வில் அரச தலைவர் தனது கையால் விவசாயி ஒருவருக்கு திட்டத்துக்கான விண்ணப்பத்தை வழங்கியிருந்தார். அந்த விவசாயிக்குக் கூட அந்த மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பம் வழங்கப்பட்ட விவசாயிக்கே மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றால் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் என்பது சந்தேகமே என்றும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் கேட்டு உரிய பதில்களை வழங்க வேண்டும் என்றும் அண்மையில் இடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பொறியிலாளர் தெரிவிக்கையில் –

குறித்த மின் இணைப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. விவசாயிகளுக்கு பிறிதொரு மின் இணைப்பை வழங்கிய பின்னர் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டில் இருந்தே அதற்கான கட்டணம் அறவிடப்படும். மீற்றர் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. அவற்றைக் கோரியுள்ளோம் என பதிலளித்தார்.

ஜனாதிபதியால் பணிக்கப்பட்ட திட்டம் ஒன்றே நடைமுறைப்படுத்த மூன்று ஆண்டுகள் ஆகின்றன என்றால் பொதுமகன் ஒருவருடைய தேவைகளை இந்த அதிகாரிகள் எப்படி நிறைவு செய்வார்கள்? 2016 ஆம் ஆண்டு திட்டத்தின் படியே கட்டணத்தை அறவிடுவார்கள் என்றால் இதுவரை செலுத்திய பணத்தை எப்படி திருப்பித் தருவார்கள். ஏமாற்று வேலைகளையே இவர்கள் செய்கின்றார்கள் என்று விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related posts:


யாழ்.நீதிமன்றத்தை மக்கள் தாக்கியமைக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரியே காரணம் -  ட்ரயல் அட்பார் தீர்ப்...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரது தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து சாவகச் சேரி பிரதேச சபை உ...
ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில...