இன்று உலக தாய்மொழி தினம்!

Sunday, February 21st, 2021

உலன தாய்மொழி தினம் இன்றாகும். அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி நாள் பிப்ரவரி 21 இல் கொண்டாடப்படுகின்றது.

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான், மேற்கு மற்றும் கிழக்கு என்று இரண்டு துண்டுகளாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தானே தற்போதைய வங்காள தேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது.

ஒரே மதத்திலான மக்கள் இரு பக்கமும் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் இருக்கும் உருது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்பட்டதை அம்மக்கள் ஏற்கவில்லை.

இதனை அடுத்து, வங்காளதேசத்தின் தேசிய மொழியாக வங்க மொழியே அமையவேண்டும் என்பதற்காக, 1952 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘வங்க மொழி இயக்கத்தை’ அங்கீகரிப்பதற்காகவே பிப்ரவரி 21-ம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த நாளில்தான் வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்களும் அரசியல் ஆர்வலர்களும், தங்கள் மொழிக்காகச் சட்டத்தை மீறி போராட்டத்தில் இறங்கினர். காவல் துறையின் நடவடிக்கையால், சில மாணவர்களும் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியது. சில ஆண்டுகள் கடந்தும் போராட்டங்கள் ஓயவில்லை. இறுதியில், 1956 ஆண்டு நாட்டின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

மொழிக்காகப் போராடிய இந்த இயக்கத்தை நினைவில் கொண்டு, உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்கவே 1999 ஆம் ஆண்டில், 21 பிப்ரவரியை சர்வதேச தாய்மொழி நாள் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: