இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Wednesday, April 13th, 2022
இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்துள்ளன.
இதேநேரம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும்.
காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்தாடை அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலையால் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
நேற்றைய (12) தினத்திற்கான மின்சார கேள்வியில் 26 வீதம், நீர்மின் உற்பத்தியினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மின் நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களில் தற்போது 30 வீதம் வரை நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்திய கடன் எல்லை வசதியின்கீழ், நாளைய தினம் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


