இன்றிரவு 10 மணிமுதல் 30 மணிநேர நடமாட்ட முடக்கம் – மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை!

Wednesday, June 23rd, 2021

கடந்த மூன்று தினங்கள் விலகிக் கொள்ளப்பட்ட பயணக்கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு பத்து மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 21 ஆம்திகதி தொடக்கம் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நேற்றுமுன்தினம் அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தது.

அதேநேரம் வார இறுதி நாட்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்கள் தொடர்பிலான குற்றம் உறுதி செய்யப்படும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் வழங்கப்படும்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிமுதல் இதுவரையில் இதுதொடர்பில் 41 ஆயிரத்து 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்புச் சட்டத்தின் 4, 5 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும்,தண்டனைச் சட்டக்கோவையின் 264 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குற்றம் உறுதிச் செய்யப்படும் பட்சத்தில் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் ஆறு மாதகால சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: