நாட்டில் வருமானங்கள் குறைவடைந்திருந்தாலும் செலவினங்கள் முன்பைப் போல காணப்படுகிறது – அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டு!

Monday, June 21st, 2021

கொரோனா பரவலினால் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணத்தின் மூலம் அரசாங்கம் நாளாந்தம் பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான வருமானங்களை இழந்துள்ளது என தெரிவித்துள்ள அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் வருமானங்கள் குறைவடைந்து இருந்தாலும் செலவினங்கள் முன்பைப் போல காணப்பட்டதாகவும் அறிவித்திருக்கின்றது.

நாளாந்த செலவினங்களுக்கு மேலதிகமாக கோவிட் ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதும் அவசியம் ஆகும்.

இவ்வாறான சவால் நிறைந்த காலத்திற்கு மத்தியிலும் அரசாங்கம் மக்களுக்கான நிவாரணங்களை தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

அரசாங்கத்திற்கு கூடுதலான வருமானத்தை ஈட்டித்தரும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் சுங்கத் திணைக்களம் சுற்றுலாதுறை உட்பட பல்வேறு நிறுவனங்களின் வருமானங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளன.

இவ்வாறான நிலையிலும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் உரிய முறையில் வழங்கப்பட்டு வருகிறது. சில அரச நிறுவனங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகங்களுக்கு வருகை தராவிட்டாலும் அவர்கள் தொடர்ந்தும் எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் கொரோனா பரவலினால் அரசாங்கத்திற்கான நிரந்தரமான வருமானங்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடு தொடர்ந்தும் மூடப்பட்டமையினாலும், பயணத் தடைகள் அமுல்படுத்தப் பட்டமையினாலும் நாட்டின் ஏற்றுமதிதுறை பாரியளவிலான நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் அமைய நாட்டை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்று சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயண கட்டுப்பாட்டினால் சுதந்திர வர்த்தக வலயங்களில் உற்பத்திச் ஏற்பாடுகள் எழுபது சதவீதத்தால் வீழ்ச்சி கண்டதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: