இந்த மாதத்தில் IMF உதவி கிடைக்கலாம் – குழப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

Tuesday, March 7th, 2023

இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று நிகழ்த்திய விசேட உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவின் கடன்மறுசீரமைக்கான எழுத்துமூல உத்தரவாதம் நேற்றிரவு தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும், அது தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநருடன் கலந்துரையாடி அதனை சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா 10 வருடத்திற்கான கடன் இரத்தையும் 15 வருடங்களுக்கான கடன் மறுசீரமைப்பு உறுதி மொழியையும் கடிதம் மூலம் உறுதிப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கியிருந்த நிலையில், சீனா வழங்கியுள்ள எழுத்துமூல உறுதியளிப்பின் படி, கடன் இரத்து மற்றும் கடன் மறுசீரமைப்பு காலம் குறித்து ஜனாதிபதி தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

இந்தநிலையில் நாடாளுமன்றில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில், அனைத்து இரு தரப்பு கடன் வழங்குநர்களும் நிதியியல் உறுதிபாடுகளை வழங்கியுள்ளனர் என்றும் இதற்கமைய, இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்க பெறும் என நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடு பெற்றுக்கொண்ட இருதரப்பு கடன்கள் தற்போது செலுத்தப்படுவதில்லை. பலதரப்பு மற்றும் வணிகக்கடன்கள் மாத்திரமே மீள செலுத்தப்படுகின்றன.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் முறியுமாயின், வெளிநாடு மற்றும் தனியார் வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த வேண்டி ஏற்படும். அது கடந்த 7 முதல் 8 மாதங்களுக்கு முன்னர் எதிர்கொண்ட நிலைமையை விட கடினமானதாக அமையும்.

வரிச்சுமை அதிகரித்துள்ளதாக தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், குறுகிய காலத்துக்கு இதனை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நிலைமையை, மக்களும், தொழிற்சங்கங்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதனை புறக்கணித்தால் தற்போதையதை விட நிலைமை மிகவும் மோசமாகும். கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதுடன் அமைதியான ஆர்ப்பாட்டங்களும் இடமளிக்கப்படும்.

அதனை விடுத்து, ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் மூலம் இந்த நடவடிக்கையை குழப்ப நினைப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உரையின் போது எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: