இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர் – கோபா குழுவில் தெரிவிப்பு!

Saturday, September 23rd, 2023

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா  குழுவில் தெரியவந்துள்ளது.

05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியமை மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு பெறுதல் போன்ற காரணங்களால் இந்த வருடம் 957 வைத்தியர்களை சுகாதார சேவை இழந்துள்ளதாக குழு முன் ஆஜராகியிருந்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய கோபா குழு கூடியபோதே வைத்தியர் ஜி.விஜேசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் சில சிகிச்சை பிரிவுகளில் 24 மணி நேர சேவைகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்துகிறார்.

இதேவேளை, சுகாதார அமைச்சில் பல முறைகேடுகள் மற்றும் பலவீனங்கள் காணப்படுவதால், மருந்துக் கொள்வனவு, ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை ஆராய இரண்டு உப குழுக்களை நியமிப்பதற்கு குழுவின் தலைவர்  லசந்த அழகியவண்ண நடவடிக்கை எடுத்திருந்தார்.

மேலும்,  தமது சேவைக்கான உரிய பெறுமதி இன்மையே வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கேதெரிவித்தார்.

இதேவேளை பெருமளவிலான தாதியர்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பயிற்சியளிக்கும் தாதி  புஷ்பா ரம்யானி டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: