இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதுடன் கடல் வளங்களையும் அழிப்பதை கட்டுப்படுத்தவே கைது செய்யப்படுகின்றார்கள் – அமைச்சர் மகிந்த அமரவீர!

Monday, August 22nd, 2016

இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்கப் போவதில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். வடமாகாண ஆளுனர் மற்றும் முக்கிய அதிகாரிகளும், இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் அத்துமீறிய வகையில் இலங்கைக் கடற்பரப்பில் வந்து மீன்பிடிப்பதுடன், இங்குள்ள கடல் வளங்களை அழிப்பதை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 130-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர் படகுகளை நாங்கள் விடுவிக்கப் போவதில்லை என்றார் அமைச்சர் மகிந்த அமரவீர.

இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இருநாட்டு வெளி விவகார அமைச்சர்கள், மீன்பிடித்துறை அமைச்சர்கள் மட்டத்தில் அடுத்த மாதம், புதுடில்லியில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலையும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரு நாட்டு அரசுகளுக்கிடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கடற்படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாணத்தின் முக்கிய மீன்பிடி துறைமுகமாகிய மயிலிட்டி துறைமுகத்தை மீளக் கையளிக்குமாறு கோரி மீனவர் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்திருப்பதை உறுதிபடுத்திய அமைச்சர் மகிந்த அமரவீர, இது தொடர்பாக கடற்படையினரிடம் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மயிலிட்டி துறைமுகத்தை மீளக் கையளிப்பதில் பிரச்சினைகள் இருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருடைய கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தி விரைவில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

Related posts: