ஏப்ரல் 21 தாக்குதல் – இந்தியாவுக்கு முன்பே இலங்கையை எச்சரித்த பாகிஸ்தான்!

Tuesday, March 30th, 2021

தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை நாட்டவர் எளிதில் கிடைக்கக்கூடிய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடி பொருளை உருவாக்க திட்டமிடுவது தொடர்பில் பாகிஸ்தான் 2018 ஆகஸ்ட் 10 அன்று இலங்கையை எச்சரித்துள்ளமை தற்போது வெளிவந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அப்போதிருந்த இலங்கை அரசாங்கம் இந்த எச்சரிக்கை மீது கவனம் செலுத்தவில்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திடம் பாகிஸ்தான் அதிகாரிகள் விளக்கமளித்தனர். பாகிஸ்தான் அதிகாரிகள் குறித்த தீவிரவாதியின் படங்களுடன் அவர் பற்றிய தகவல்களையும் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரைப் பற்றிய தகவல்களில் ஆயுதப் பயிற்சி குறித்த கையேடு , குண்டு வெடிக்கும் திட்டங்கள், வாகனம் மூலம் குண்டு வெடிக்கும் திட்டங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.

எனினும், கொழும்பில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மூன்று உயர்மட்ட ஹோட்டல்களை குறிவைத்து ஏப்ரல் 21 தாக்குதலுடன் இந்த நபரை நேரடியாக இணைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று ஆணையம் கூறுகிறது.

இதற்கிடையில், பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி அன்று போதுமான மற்றும் விரிவான விவரங்களை தெரிவித்தனர்.

இருப்பினும், போதுமான தகவல்கள் கிடைத்த போதிலும் தாக்குதலைத் தடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: