தேங்காய்க்கு வெளிநாடுகளில் கிராக்கி!

Sunday, October 1st, 2017

தென்மராட்சி பிரதேச தேங்காய்களுக்கு வெளிநாடுகளில் மவுசு ஏற்பட்டுள்ளது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் சந்தைகளிலிருந்து வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால் உற்பத்தியாளர்கள் இலாபமடைகின்றனர். ஆனால் உள்ளூர் மக்கள் சந்தைகளில் அதிகரித்த விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தைகளில் ஒரு தேங்காய் 50 ரூபா தொடக்கம் 90 ரூபா வரை விற்கப்படுகிறது. சந்தைகளுக்குத் தேங்காய்கள் கொண்டுவரப்படும் போது வெளிநாடுகளுக்கு தேங்காய்கள் ஏற்றுமதி செய்பவர்கள் நிற்பார்கள். அவர்கள் அதிக விலை பேசி தேங்காய்களைக் கொள்வனவு செய்கின்றனர். கொள்வனவு செய்யப்படும் தேங்காய்களை மூடைகளாகக் கட்டி பாரவூர்திகளில் கொண்டு செல்கின்றனர். இதனால் உள்ளூர் வியாபாரிகள் தேங்காய்களைக் கொள்வனவு செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.

முன்னர் தென்பகுதியில் இருந்தே வெளிநாடுகளுக்கு தேங்காய்கள் அனுப்பப்பட்டன. தற்போது அங்கும் விலை அதிகரித்துள்ளது. இதனால் வடக்கின் தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தற்போது தென்மராட்சிப் பிரதேச தேங்காய்களுக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு காணப்படுகின்றது. இந்தத் தேங்காய்களை அதிகம் அனுப்பி வைக்குமாறு வெளிநாடுகளில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வருடாந்தம் மே மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை தேங்காயின் விலை வீழ்ச்சியடையும். பருவமழை பெய்யத் தொடங்கியதும் மெல்ல மெல்ல விலை அதிகரிக்கும். ஒக்டோபர் மாதமளவில் 40 ரூபா வரை விற்பனை செய்யப்படும். இந்த வருடம் பருவக் காற்று வீசத் தொடங்கியதும் பெருமளவு தேங்காய்கள் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டன. எனினும் வெளிநாடுகளுக்கு அனுப்ப தேங்காய்கள் கொள்வனவு செய்யப்படுவதால் கடந்த ஆறு மாதங்களாக தேங்காய்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. விலை வீழ்ச்சி ஏற்படவில்லை. தேங்காய் விலை அதிகரிப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால் நகரப் புறத்தில் வாழும் மக்கள் தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது

Related posts:


விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய!
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு - அமைச்சர் நிமல் ச...
கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் திங்கள்முதல் நாடுமுழுவதும் இறுக்கமான நடைமுறை - இராணுவத் ...