இந்தியாவில் வாழும் ஈழ அகதிகள் வாக்களிக்கக் கோரினால் பரிசீலிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, December 6th, 2021

புதிய முறைமையிலோ, பழைய முறைமையிலோ அல்லது திருத்தங்கள் செய்யப்பட்டோ விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வாக்குரிமை விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான 2022 – 2025 வரையான காலப்பகுதிக்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்கான கூட்டம் நேற்று நடந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளூரதிகார சபைகளின் காலப்பகுதி நிறைவடைவு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் மேலும் கூறுகையில் –

நடைமுறைச் சிக்கல் காரணமாக மாகாணசபைகளுக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாத நிலை காணப்படுகின்றது. அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலமும் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவம் அற்ற நிலையில் மாகாண சபையின் நிர்வாக பொறிமுறை அரச அதிகாரிகளால் கொண்டுசெல்லப்பட்டுவரும் நிலையில் உள்ளூராட்சி மன்றங்களினதும் நிலையும் அமைய வாய்ப்புள்ளது.

இதேநேரம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி புதிய உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக் காலம் ஆரம்பமாக உள்ள நிலையில் தேர்தல் திணைக்களம் அதற்கான முன்னாயத்த பணிகளை மேதற்கொண்டு வருகின்றது.

ஆனாலும் சட்ட வரைமுறைகளில் உள்ள சிக்கல் நிலைகள் காரணமாக அதை சீர்செய்யும் காலப் பகுதிவரையில் தேர்தல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது துறைசார் அமைச்சருக்கு அதை மேலும் ஒருவருடம் நீடிப்பதற்கான அதிகாரமும் காணப்படுகின்றது.

மேலும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களது குறிப்பாக இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் வாக்காளராக பதிவு செய்வது தொடர்பில் கூறுகையில் – இதுவரையில் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் வாக்களிப்பது தொடர்பில் எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. ஒரு சிலரை தவிர அதிகளவான அரசியல்வாதிகளும் இது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை. என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் புதிய முறைமையிலோ, பழைய முறைமையிலோ அல்லது திருத்தங்கள் செய்யப்பட்டோ விரைவாக தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதித்தவங்களுடன் அரச இயந்திரங்கள் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்றார்.

இந்தக் கலந்துரையாடலில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹமட், பத்திரண, திவாரட்ண, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழ். மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர் அமல்ராஜ், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பொது அமைப்பகளின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் என பலருரும் கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: