இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் – பாரத பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் நம்பிக்கை தெரிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க .இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்
ஹைதராபாத் இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையில் சில உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தங்களில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்குப் பதிலாக இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தனது முதல் விஜயத்தின் போது, இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமான சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய-இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டள்ளார்.-
இதேவேளை இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமுல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அத்துடன் நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.
இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|