இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி – அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு!

Monday, April 25th, 2022

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணவும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக 3 பீடங்களின் பீடாதிபதிகளுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்திருந்தனர்.

அதில், புதிய அமைச்சரவை தீர்வாகாது என்றும் உரிய தீர்வு இன்றேல், சங்க கட்டளையை பிறப்பிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

அதனையடுத்தே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கோட்டாபய ராஜபக்ஷ, மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுக்கும் பதில் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் பௌத்த அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் நேற்று காலை மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: