ஆசியான் பிராந்திய மன்றத்துடனான உறுதிப்பாட்டை வலியுறுத்தியது இலங்கை!

Wednesday, August 11th, 2021

ஆசியான் பிராந்திய மன்றத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இலங்கை வெளிப்படுத்தியதுடன், கருத்துக்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக முனைப்பானதொரு முயற்சியுடன் பிராந்திய மன்றத்துடனான ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும்  வலியுறுத்தியுள்ளது.

புரூனே வெளிநாட்டு அமைச்சர் டட்டோ எரிவான் யூசொஃப் தலைமையில் நடைபெற்ற மெய்நிகர் ரீதியாக நடைபெற்ற 28 ஆவது ஆசியான் பிராந்திய மன்றத்தில் உரையாற்றுகையிலேயே பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, இவ்வாறு இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், கடல் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் வெற்றிகரமான கடல் சார்ந்த வர்த்தக முறையை ஊக்குவித்தல், மற்றும் கூட்டுப் பொறிமுறையொன்றின் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் சூழலில் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றுக்காக இராஜாங்க அமைச்சர் ஆசியான் பிராந்திய மன்றத்தைப் பாராட்டினார்.

வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் இணைந்து, 2022ஆம் ஆண்டு பரவலாக்கலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிராயுதமயமாக்கலுக்கான இடைக்கால சந்திப்பின் இணைத் தலைவராக இலங்கை நியமிக்கப்பட்டது. இந்த முயற்சியில், அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கும்.

எதிர்கால செழிப்புக்காக இளைஞர்கள் மீது முதலீடு செய்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி, புரூனே தாருஸ்ஸலாம், இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகியவற்றுடன் இணைந்து, இந்த ஆண்டு ஆசியான் பிராந்திய மன்றத்தில் இளைஞர்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கும் கூட்டு அறிக்கைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது.

மேலும், இராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் கொரியத் தீபகற்பத்தில் முழுமையாக அணுவாயுதமயமாக்கலை ஒழித்தல் மற்றும் நிரந்தரமான அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றுக்கு அனைத்து உறுப்பினர்களும் அழைப்பு விடுத்தனர்.

தென் சீனக் கடல் குறித்து குறிப்பிடுகையில், சர்வதேச சட்டத்தின் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற கொள்கைகளுக்கு அமைய விடயங்களை சமாதானமாகத் தீர்ப்பதன் மூலம் சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரித்து, ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இச்சந்திப்பு மீண்டும் வலியுறுத்தியது.

பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் மற்றும் வேகமாக மாறிவரும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சூழலுக்குள் உரையாற்றுவதற்கான உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மேலும் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: